சினிமாவில் "கொள்கை' ஒத்து வராது
First Published : 28 Jul 2010 01:40:08 AM IST
Last Updated :
அஞ்சலி
காராஜா', "தூங்கா நகரம்', "தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என அடுத்தடுத்த படங்கள் வெளியாகத் தயாராக இருக்கும் நிலையில், அந்தப் படங்களின் நாயகி அஞ்சலியிடம் பேசினோம்...இனி அவருடன்...சோகம் கலந்த கேரக்டரில் நடிப்பதுதான் உங்கள் பாலிஸி. இப்போது கிளாமராக நடிக்க தொடங்கி விட்டீர்களே?கிளாமராக நடித்து பெரிய ஆளாக வேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்படிப்பட்ட சினிமாக்களில் எனக்கு ஆர்வமும் கிடையாது. "கற்றது தமிழ்' முதல் "அங்காடித் தெரு' வரை எல்லாவற்றிலும் ரசிகர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. இனியும் அப்படித்தான் என்னை எதிர்பார்க்கப் போகிறார்கள். அந்த எதிர்ப்பார்ப்பை தவிர்த்துவிட்டு தனியாக நின்று ஜெயிக்க முடியாது. அஞ்சலி இருந்தால் அந்தப் படத்தில் கதை இருக்கனும்னு நினைக்கிறேன். கதை இல்லாத கமர்ஷியல் சினிமாக்களில் வந்து போக எனக்கு பிடிக்கவில்லை. "மகாராஜா' படத்தில் கிளாமராக நடிப்பதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஒரு பாட்டுக்காக கவர்ச்சியாக வந்து போவேன் அவ்வளவுதான். அதில் விரசம் இருக்காது. "அங்காடித் தெரு'வில் வரும் ஜவுளிக் கடைப் பாட்டு ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பாட்டில் கிளாமர் இருந்ததா? அது போல்தான் இதுவும் கதையோடு ஒட்டி வருகிற பாட்டு.தமிழ் சினிமாவே கிளாமரில் பரபரத்துக் கிடக்கும் போது, உங்களின் பாலிஸி நம்பத் தகுந்ததா?கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். ஆள் பற்றாக்குறை கிளாமர் விஷயத்தில் எப்போதுமே சினிமாவுக்கு வந்து விடாது. கேரக்டர் ரோலில் நடிக்கத்தான் இங்கு ஆள்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், அதை சரியாக செய்ய எத்தனை பேர் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சினிமாவை கமர்ஷியலாக தரும் போது கிளாமர் முக்கியமான விஷயம். கிளாமர் இல்லாமல் சினிமா எடுப்பதற்கு, நாம் ஒன்றும் ஆர்ட் ஃபிலிம் எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும். கதைக்கு ஏற்றக் கேரக்டரில் நடிக்கத் தெரிகிறது. அதை சரியாக செய்கிறேன். சினிமாவில் பாலிஸி ஒத்து வராது. இடையில் கிளாமரில் வந்து போன சினிமா ஒன்றும் தோற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான்.கன்னடம்தான் உங்களின் தாய் மொழி. ஆனால் ஆண்டுக்கு ஒரு படம் கூட அங்கு நடிக்கவில்லையே?உண்மைதான். இப்போதைக்குத் தமிழில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். தமிழ் சினிமாவில் இருக்கிற சில விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. கதை, பாடல்னு புத்தம் புதுசா அசத்திக்கிட்டே இருக்கிறார்கள். கேட்கிற கதைகள் எல்லாம் பிடித்திருக்கிறது. எல்லாக் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. "அங்காடித் தெரு' படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ஆசை வைத்திருக்கிறேன். இப்போது முடிந்திருக்கிற படங்கள் எல்லாம் உங்களுக்கு இன்னும் பிடித்துப் போகும். கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்திலும் வாய்ப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிடித்தவற்றில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றிருக்கிறேன். கன்னடத்தில் நடித்து 2 ஆண்டுகள் ஆகி விட்டன. மொழி எதுவாக இருந்தாலும் கதைதான் முக்கியம்.மலையாளத்தில் லியோ பாண்டி, தமிழில் எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி என சிலர் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார்களாமே?இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாத நிலை. நிறைய இயக்குநர்கள் தங்கள் படங்களில் நடிக்க தொடர்புகொண்டுள்ளனர். மு.களஞ்சியம் சார் இயக்கத்தில் "கருங்காளி' என்ற படத்தில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் என்னிடம் எதை அடுத்தது எதிர்பார்த்து இருக்கிறார்களோ, அந்த மாதிரியான ஒரு கேரக்டர் வந்திருக்கிறது. இப்போதுதான் "மகாராஜா', "தூங்கா நகரம்',"தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என படங்கள் முடிந்திருக்கின்றன. இதனால் அடுத்தப் படத்துக்கான இறுதி முடிவில் நான் இல்லை. மலையாளத்தில் லியோ பாண்டி இயக்கத்தில் ஒரு படம் வந்திருக்கிறது. அதில் நடிக்கலாம் எனவும் முடிவு எடுத்திருக்கிறேன்.